துக்கிரி சிறுகதை

கதாவனி

திருமணம் ஆன ஒரு வாரத்தில் இப்படியும் நடக்குமா? அழவும் தோன்றவில்லை மாலினிக்கு...

சிவாவின் உடல் குளிரூட்டப்பட்ட பெட்டியில் கிடத்தப்பட்டிருந்தது. மாலினி பிரம்மை பிடித்தவள் போல் நின்றிருந்தாள். திருமணத்துக்கு வந்த உறவினர்களை காரில் ஏற்றிச் சென்று விமான நிலையத்தில் இறக்கி விட்டு வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சிவாவின் காரில் மோத கார் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரை விட்டான்.

உறவினர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். இன்னும் அப்பாவும் அம்மாவும் வரவில்லை.

நடந்த திருமணம் ஒரு கனவு போல் இருந்தது மாலினிக்கு. பொறியியல் படிப்பு முடிந்ததும் அப்பா ஜாதகம் பார்க்க ஆரம்பித்து விட்டார். மாலினிக்கு மேல் படிப்பு படிக்க ஆசை.

"இவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து கொள் என்று ஏன் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்? எனக்கு மேலே படிக்க வேண்டும்" என்று மாலினி சொன்னதை அப்பா அலட்சியம் செய்தார்.

"பாரும்மா..தங்கமான பையன்..பெரிய பதவியில் இருக்கிறான்...பார்க்க லட்சணமாக இருக்கிறான்...மத்திய தர குடும்பம்தான்...இவனுக்கு கீழே ஒரு தம்பி மட்டும் இருக்கிறான்...உன் போட்டோவைப் பார்த்ததும் அவர்களுக்கு பிடித்து போய் விட்டது...வரும் ஞாயிற்றுக் கிழமை பெண் பார்க்க வருகிறார்கள்" என்ற அப்பாவின் பேச்சை தட்ட முடியவில்லை.

பெண் பார்த்து பிடித்து போய் மூன்று மாதங்களுக்குள் திருமணமும் ஆகி விட்டது. சிவாவின் அம்மா வருவோர் போவோர் எல்லோரிடமும் மாலினியைப் பற்றி புகழ்ந்து பேசினாள். நல்ல படிப்பு, நல்ல குடும்பம்..சிவாவுக்கு இவள் கிடைத்தது பூர்வ ஜென்ம புண்ணியமே என்று வாயார புகழ்ந்தாள்.

சிவாவை இன்னும் முழுசாக அறியவில்லை..அதற்குள் இப்படி ஆகி விட்டது. துக்கம் கேட்க வருவோர் எல்லாம் மாமியாரை கட்டிக் கொண்டு அழ அவளோ "துக்கிரி...இவள் கால் எடுத்து வைத்த நேரம் சரியில்லை...பாருங்கோ கொஞ்சம் கூட அழாமல் கல்லு மாதிரி நிக்கிறா...ஜாதகம் பார்த்துதான் சம்பந்தம் முடிச்சோம்...ஒரு வேளை ஜாதகத்தை மாற்றி இருப்பார்களோ? என்று மாலினி காது பட அழுதாள்.

அப்பாவும் அம்மாவும் வந்து விட்டார்கள்..மாலினியை கட்டிக் கொண்டு அம்மா அழுதாள். எதற்கும் அசராத அப்பா கலங்கி நின்றார்.

அப்பாவும், அம்மாவும் மாமியாரை துக்கம் கேட்க காதில் விழாத மாதிரி முகத்தை திருப்பிக் கொண்டது மாலினிக்கு சினத்தை வரவழைத்தது. தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

காரியங்கள் விறுவிறுவென்று நடந்தன. பதிமூன்றாம் நாள் சுபஸ்வீகாரம் நடந்து முடிந்து எல்லோரும் சாப்பிடும் போது "கல்யாண சாப்பாடு சாப்பிட்டு கை காயும் முன்னரே காரியத்திற்கு சாப்பிட வைத்து விட்டாள் துக்கிரி...எப்படி சாப்பிடறா பாருங்கோ...புருஷனை எமனுக்கு கொடுத்துட்டு பாயசமும், வடையுமா சாப்பிடறா...இவள் எல்லாம் ஒரு பொண்ணா? இனிமே இவ உருப்பட மாட்டா என்று மாமியார் சாபமிட அமைதியாய் கேட்டுக் கொண்டு சாப்பிட்டு முடித்தாள்.

அப்பாவும் அம்மாவும் மாலினியை தங்களோடு அழைத்துக் கொண்டு போகப் போவதாக சொன்னதும் "அதை முதல்ல செய்யுங்கோ..இனிமேல் அவள் இங்கே வரக் கூடாது" என்று சொல்லி விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்..மாமனாரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டனர்.

மாலினி தான் நினைத்தபடி அமெரிக்காவில் MS படித்தாள். படித்து முடித்ததும் உடனே வேலை கிடைத்து கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்தாள்...அப்பாவும் அம்மாவும் வயதான காலத்தில் ஊரில் தனியாக இருப்பார்கள் என்று நினைத்து சென்னைக்கு வந்து உயர் பதவியில் ஒரு வேலை தேடிக் கொண்டாள். அப்பாவையும் அம்மாவையும் தன்னுடன் வந்து இருக்குமாறு எவ்வளவோ சொல்லியும் "இங்கே எங்கள் சொந்த வீட்டில் இருப்பதுதான் எங்களுக்கு சௌகரியமாக இருக்கு.. அப்பப்ப வந்து பார்த்து கொள்கிறோம்" என்று சொல்லி அவளுடன் தங்க மறுத்து விட்டனர்.

அப்பாவும் அம்மாவும் வந்து தங்கினால் சௌகரியமாக இருக்கும் என்று மூன்று படுக்கை அறை கொண்ட பிளாட் வாங்கினாள்.

அப்பா மறுபடியும் திருமணம் செய்ய வற்புறுத்திய போது "இப்போது வேண்டாம் பிறகு பார்க்கலாம்" என்று மறுத்து விட்டாள்.

நாட்கள் நகர நகர அவளின் மன வேதனை கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. அதுவும் அலுவலகத்தில் சம அந்தஸ்தில் உள்ள கார்த்திக்கின் நட்பு கிடைத்தது ஒரு ஆறுதலாக இருந்தது. ஒரு நாள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும் அவளின் மனம் ஏதோ பறி கொடுத்தது போல் இருந்தது. உடனே போன் செய்து நலம் விசாரிப்பாள்.

அவனின் பளீரென்ற புன்னகையும், அறிவுக் கூர்மையும் எதற்கும் கலங்காத அவனின் மனமும் அவளை அவன் பால் ஈர்க்க செய்தது. அவனுக்கும் என்னை போல் இருக்குமோ என்று எண்ணி குழம்பினாள். அவர்களின் நட்பு ஹோட்டல், சினிமா, பீச் என்று போகும் அளவுக்கு வளர்ந்தது.

"இன்னிக்கு பீச் போகலாமா மாலினி?" என்று ஒரு நாள் அவன் அழைக்க அவனுடன் கிளம்பினாள்.

பீச்சில் காதலர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டும், கை கோர்த்துக் கொண்டும் செல்வது இவளுக்கு வியப்பளித்தது. "என்ன இது.. பொது இடம் என்று வெட்கம் இல்லாமல்" என்று நினைத்துக் கொண்டாள்.

கடலை நோக்கி செல்கையில் அவனின் கைகள் இவள் கைகளின் மீது அடிக்கடி பட்டது. வேண்டாம் என்று நினைத்தாலும் அந்த ஸ்பரிசத்துக்கு மனது ஏங்கியது.

சட்டென்று அவன் இவளின் இடுப்பை தன் கைகளால் வளைத்துக் கொண்ட போது உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட குப்பென்று முகம் சிவந்தாள்..

"என்ன இது.. அநாகரியமாக" என்று அவளின் வாய் பேசினாலும் அவனின் அணைப்பை அவள் விரும்பவே செய்தாள்.

"என்னைப் பற்றி உனக்கு தெரியும்...உன்னைப் பற்றி எனக்கு தெரியும்..பின் எதற்கு இந்த கண்ணாமூச்சி?" என்று அவன் பளீரென்று சிரிக்கையில் தன்னை மறந்து அவனைக் கட்டிக் கொண்டாள்.

பிறகு வேலைகள் விறுவிறுப்பாக நடந்தது..கார்த்திக்கை அப்பாவுக்கு மிகவும் பிடித்து விட்டது.

"உங்களுக்கு எந்த ஊர்?" என்று அப்பா கேட்க

"குடவாசல்...அப்பா நீலகண்ட சாஸ்திரிகள்
அவர் இப்போது இல்லை. அம்மா மட்டும்தான். அப்பாவின் நினைவாக நாங்கள் வாழ்ந்த வீட்டிலேயே இருக்கிறார்.." என்று கார்த்திக் சொன்னதும்

"எங்களுக்கு கும்பகோணம் பக்கத்தில் உள்ள தாராசுரம்" என்றார் அப்பா.

கார்த்திக்கின் அம்மாவிடம் சம்பந்தம் பேசி திருமணம் மிக எளிமையாக நடந்தது.

"உன்னிடம் ஒன்று சொல்ல மறந்து விட்டேன்..சிவாவின் அம்மா அப்பா இப்போது தனியாக இருக்கிறார்கள்..அவர்களின் இரண்டாவது மகனின் மனைவியுடன் ஒத்து போகவில்லை..ஆகவே தனியாக சென்று விட்டார்கள்..சிவாவின் அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை.. நடக்கவே சிரமப்படுகிறார் அவரின் கணவர் பார்த்து கொள்கிறார்...உன்னை எப்படி கீழ்த்தரமாக பேசினார்...இப்போது அனுபவிக்கிறார்" என்று அப்பா சொன்னதைக் கேட்டதும்

"அப்படி சொல்லாதீர்கள் அப்பா..மகனை பறிகொடுத்த சோகம் அவரை அப்படி பேச வைத்தது..என்ன பேசுகிறோம் என்ற மனநிலையில் அவர்கள் இல்லை..இப்போதுதான் அவர்களுக்கு உதவி தேவை.. அதை நான் செய்வேன்" என்று சொல்லி விட்டு கார்த்திக்குடன் கலந்து ஆலோசித்து சிவாவின் வீட்டுக்கு சென்றாள்.

மாமனார் இவளைக் கண்டதும் "வாம்மா" என்றார். மாமியார் படுக்கைக்கு அருகில் சென்றதும் இவளைப் பார்த்து கேவி கேவி அழுதாள்.

"அம்மா அழாதீங்கோ...உங்களுக்கு ஆதரவாக நான் இருக்கேன்..கவலைப்படாமல் என்னோட வாங்கோ..பெரிய வீடு..உங்களுக்கு சௌகரியமாக இருக்கும்...என்று கூப்பிட என்ன சொல்வது என்று புரியாமல் முழித்தாள்.

"இவர் என்னோட கணவர். பெயர் கார்த்திக்" என்று அறிமுகப்படுத்தியதும் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தாள்.

"இந்த வீட்டை வாடகைக்கு விட்டு விடலாம்..இப்போதே கிளம்புங்கள்..உங்களுடைய உடமைகளை நான் மற்றொரு நாள் வந்து எடுத்து வருகிறேன்" என்று மாலினி சொன்னதும் கட்டுப்படுத்த முடியாமல் விசும்பி விசும்பி அழுதாள் மாமியார்.

RECOMMENDED CONTENTS

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES